வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடத்தை கொரட்டூர் பகுதியில் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கொரட்டூர் பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு அந்த பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் எனக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-16 23:00 GMT

அம்பத்தூர்,

 அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கொரட்டூர் ஏரியையொட்டி முத்தமிழ் நகர், கங்கை நகர், எஸ்.எஸ்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 589 வீடுகள் கொரட்டூர் ஏரியை ஆக்கிரமித்து இருந்தன. இதனையடுத்து பொதுப்பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமித்து இருந்த 589 வீடுகளை அதிரடியாக இடித்து அகற்றினார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளுடன் பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடமாக காஞ்சீபுரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் உள்ள அரசு குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டது. இது அதிக தூரம் இருப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அம்பத்தூரில் இருந்து 10 கி.மீ தொலைவுக்குள் மாற்று இடம் ஒதுக்குமாறும் அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அம்பத்தூர் உழவர் சந்தை அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சீமான் கூறியதாவது:–

கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதியில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். ஆனால் அரசு அவர்கள் வசித்து வந்த 500–க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அவர்களை அனாதையாக்கி விட்டது.

இவர்களுக்கு மாற்று இடம், கொரட்டூர் பகுதியில் அருகிலேயே உள்ள மதானங்குப்பம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே அந்த இடத்தில் இந்த மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித்தர வேண்டும்.

மேலும் இடிபாடுகளில் காணாமல் போன ரே‌ஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்பட்டால் நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தும்.

இந்த மக்கள் வசிக்கும் வகையிலான மாற்று இடத்தை கண்டறிந்து அவ்விடத்தை விரைவில் வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பேரணியாக சென்று மனு கொடுப்போம்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்