தர்மபுரியில், 2-வது நாளாக ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன்கடை பணியாளர்கள் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கணிசமான அளவில் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தன. ரேஷன் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டதால் நுகர்வோர் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இந்த நிலையில் ரேஷன்கடை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சுகமதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சங்க மாவட்ட பொருளாளர் ஜான்ஜோசப், மாவட்ட செயலாளர் மனோகரன் உள்பட சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்க பேசினார்கள்.
நுகர்பொருட்கள் வினியோகத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். ரேஷன் கடைகளில் சரியான எடையில் நுகர்வோருக்கு பொருட்கள் வழங்குவதோடு 100 சதவீத பொருட்கள் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும். உணவு பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். ரேஷன்கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை ரேஷன்கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ரேஷன்கடை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.