பாலக்கோடு அருகே: மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் பரிதாப சாவு - கணவர் படுகாயம்

பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். இவருடைய கணவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-10-16 21:45 GMT
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ராமனக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தண்டாயுதபாணி (வயது 40). இவருடைய மனைவி லட்சுமி (37). கட்டிட தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு சாப்பிட மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். பாலக்கோடு பைபாஸ் பிரிவு சாலையில் சென்ற போது தர்மபுரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் கணவன்-மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் லட்சுமி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த தண்டாயுதபாணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பெண் இறந்த சம்பத்தால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது.

மேலும் செய்திகள்