நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட போலீஸ் நிலையத்துக்கு வி‌ஷம் குடித்து வந்த வாலிபர் சாவு

நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு வி‌ஷம் குடித்து வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-10-16 22:00 GMT

திசையன்விளை, 

நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு வி‌ஷம் குடித்து வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

வி‌ஷம் குடித்த வாலிபர்

நெல்லை மாவட்டம் திசையன்விளை–இடையன்குடி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் நாடார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர். இவருடைய மகன் ஜெனிபர் (வயது 27). இவரை போலீஸ் எனக்கூறி பணம் கேட்டு மிரட்டியதாக வந்த புகாரின் பேரில், திசையன்விளை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர், சம்பவத்தன்று திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட வந்தார். அப்போது அவர் வி‌ஷம் அருந்தி இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தார். உடனே அவரை போலீசார் மீட்டு திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி சாவு

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவருடைய உடல்நிலை சரிவராததால் தொடர்ந்து நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜெனிபர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வி‌ஷம் குடித்து இறந்த ஜெனிபருக்கு குயின் என்ற மனைவியும், காருண்யா (4) என்ற பெண் குழந்தையும் உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்