மகா புஷ்கர விழா: தாமிரபரணி ஆற்றில் 5-வது நாளாக பக்தர்கள் புனித நீராடினர்

மகா புஷ்கர விழாவையொட்டி, தாமிரபரணி ஆற்றில் 5-வது நாளாக பக்தர்கள் புனித நீராடினர்.

Update: 2018-10-16 08:35 GMT
ஸ்ரீவைகுண்டம், 

மகா புஷ்கர விழாவையொட்டி, தாமிரபரணி ஆற்றில் 5-வது நாளாக பக்தர்கள் புனித நீராடினர்.

மகா புஷ்கர விழா

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் ஏராளமானவர்கள் தாமிரபரணி நதியில் புனித நீராடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதி பாயும் மருதூர் அணையில் இருந்து புன்னக்காயல் வரையிலும் உள்ள 29 படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த படித்துறைகளில் பாதுகாப்பான முறையில் புனித நீராட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மகா புஷ்கர விழாவின் 5-ம் நாளான நேற்று கும்ப ராசிக்காரர்கள் புனித நீராட உகந்த நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அந்த ராசிக்காரர்கள் திரளாக வந்து, தாமிரபரணியில் புனித நீராடினர். மற்ற ராசிக்காரர்களும் தாமிரபரணியில் புனித நீராடினர்.

புனித நீராடிய பக்தர்கள்

‘தட்சண கங்கை’ என்று அழைக்கப்படும் முறப்பநாடு கைலாசநாத சுவாமி கோவில் படித்துறை, ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள படித்துறை, ஆழ்வார்திருநகரி சங்கு படித்துறை, குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் படித்துறை, மங்களகுறிச்சி, ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் படித்துறை, சுந்தர விநாயகர் கோவில் படித்துறை, வாழவல்லான், உமரிக்காடு, முக்காணி வெங்கடேச பெருமாள் கோவில் படித்துறை, ராம பரமேசுவரர் கோவில் படித்துறை, சேர்ந்தபூமங்கலம் கைலாசநாத சுவாமி கோவில் படித்துறை, சங்கமம் படித்துறை போன்றவற்றில் காலையில் யாகசாலை பூஜைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து திரளான பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடினர். மாலையில் தாமிரபரணி நதிக்கு தீபாராதனை நடந்தது.

மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளின் அருகில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சகாய ஜோஸ் (ஸ்ரீவைகுண்டம்), தீபு (திருச்செந்தூர்) ஆகியோர் தலைமையில், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்