பண்ருட்டியில்: 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்; விவசாயி பலி

பண்ருட்டியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விவசாயி பலியானார்.

Update: 2018-10-15 21:30 GMT
பண்ருட்டி, 


பண்ருட்டி அருகே எஸ்.கே. பாளையத்தை சேர்ந்தவர் மணி (வயது 50). விவசாயி. சம்பவத்தன்று மணி தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவருடைய மனைவி வள்ளி (45), மகன் மருதுபாண்டியன் (28) ஆகிய 2 பேரும் மணியை சிகிச்சைக்காக காரில் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் பண்ருட்டி ரெயில்வே மேம்பாலத்தில் வந்த போது, எதிரே வந்த மற்றொரு கார் அவர்கள் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. மேலும் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் இருந்த மணி, வள்ளி, மருதுபாண்டியன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பண்ருட்டி ராஜாமொய்தீன் ஆகிய 4 பேரும் காயமடைந்தனர்.

உடன் அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 பேருக்கும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் (பொறுப்பு) மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்