விருத்தாசலத்தில் ; விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
விருத்தாசலத்தில் விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவரை கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாத்துக்கூடல் மேல்பாதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் செல்வம் (வயது 40). விவசாயி. இவர் தன்னுடைய வயலில் தோண்டிய மண்ணை அப்பகுதியில் குவித்து வைத்திருந்தார். இது குறித்து அறிந்த விருத்தாசலம் தாசில்தார் ஸ்ரீதரன், செல்வத்திடம் இது பற்றி விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து தாசில்தார் ஸ்ரீதரனும், அவரது டிரைவர் கந்தசாமியும் வயலில் உள்ள மண்ணை வெட்டி எடுத்ததற்காக செல்வத்திடம் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவரும் பேரம் பேசி ரூ.60 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து முதல் தவணையாக ரூ.20 ஆயிரத்தை செல்வம், தாசில்தார் ஸ்ரீதரனிடம் கொடுத்து விட்டாராம்.
இந்நிலையில் மீதித்தொகை ரூ.40 ஆயிரத்தை கொடுக்க செல்வம் காலதாமதம் செய்தார். இதனால் தாசில்தார் ஸ்ரீதரனும், டிரைவர் கந்தசாமியும் அவரிடம் ரூ.40 ஆயிரத்தை கேட்டு வற்புறுத்தி வந்தனர். இதையடுத்து செல்வம் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜாசிங், இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், சண்முகம், திருவேங்கடம் மற்றும் போலீசார் ரசாயன பொடி தடவிய ரூ.40 ஆயிரத்தை செல்வத்திடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.
இந்த பணத்தை வாங்கிய செல்வம், தாசில்தார் இருக்கும் இடத்தை அறிந்துக்கொண்டு, தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள அவரது முகாம் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த தாசில்தார் ஸ்ரீதரன், டிரைவர் கந்தசாமி ஆகியோரிடம் செல்வம் ரூ.40 ஆயிரத்தை கொடுத்தார். இதை அவர்கள் வாங்கிய போது, அங்கு மாறுவேடத்தில் மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த தகவல் பரவியதும் தாலுகா அலுவலகம் முன்பு ஏராளமானோர் கூடினர். இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து, கூட்டத்தை கலைந்து போக செய்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.