மதிப்பெண் சான்றிதழை திருத்தி மோசடி பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர் கைது

மதிப்பெண் சான்றிதழை திருத்தி மோசடி செய்ததாக பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-15 22:45 GMT
மும்பை,

ரத்னகிரியில் உள்ள கல்லூரியில் மெக்கானிக் என்ஜினீயரிங் படித்து வருபவர் சுயாஷ்(வயது22). இவர் கடந்த 2 ஆண்டுகளாக முதலாம் ஆண்டு செமஸ்டர்களில் தோ்ச்சி பெற முடியாமல் இருந்தார். இந்தநிலையில் அவர் மறுகூட்டல் மூலம் அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக கல்லூரியில் மும்பை பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்தார்.

அந்த மதிப்பெண் சான்றிதழ் மீது சந்தேகம் அடைந்த கல்லூரி நிர்வாகம் சான்றிதழை மும்பை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தது. அப்போது அது திருத்தம் செய்யப்பட்ட போலி மதிப்பெண் சான்றிதழ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் போலீசில் புகாா் அளித்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், மாணவர் மும்பை பல்கலைக்கழக தேர்வு துறை ஊழியர்களுக்கு ரூ.97 ஆயிரம் கொடுத்து மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோசடி தொடர்பாக கல்லூரி மாணவர் சுயாஷ், தரகராக செயல்பட்ட கல்லூரி காவலாளி விக்னேஷ், மும்பை பல்கலைக்கழக தேர்வுத்துறையை சேர்ந்தவர்களான ஊழியர் கணேஷ், கணினி ஆபரேட்டர் கோரக்நாத், உதவியாளர்கள் மகேஷ், பிரவீன் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்