கீழவளவு பகுதிக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
கீழவளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
மேலூர்,
மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியில் கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. இதனால் கீழவளவு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நெல் பயிரிட முடியாமல் விவசாயிகள் பாதிப்பபு அடைந்தனர். அரசு அதிகாரிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் கால்வாயில் தண்ணீர் திறக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று முன்னாள் ஊராட்சி தலைவர் தர்மலிங்கம் தலைமையில் கீழவளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெல் நாற்றுகளையும், காலி குடங்களையும் சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் விவசாயிகள் மறியலை கைவிட்டனர். விவசாயிகள் போராட்டத்தால் மேலூர்– திருப்பத்தூர் ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.