வெளிமாவட்ட மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கக்கூடாது; கலெக்டரிடம் மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிமாவட்ட மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என்று கலெக்டரிடம் மீனவர்கள் மனு கொடுத்தனர்.

Update: 2018-10-15 22:45 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

இதில் ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் ஏராளமான மீனவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு கடற்பகுதியில் தனுஷ்கோடி முதல் வாலிநோக்கம், முந்தல், மாரியூர், ரோச்மாநகர் வரையிலான கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக வெளிமாவட்டங்களை சேர்ந்த மீனவர்களை படகுகளுடன் அழைத்து வந்து தங்கவைத்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இவர்களின் மீன்பிடிப்பு முறை பாரம்பரிய மீன்பிடி முறைக்கு எதிராக உள்ளது. குறிப்பாக கடலாடி தாலுகாவில் மேலமுந்தல், கீழமுந்தல் பகுதியில் இவ்வாறு வெளிமாவட்ட மீனவர்களை அழைத்து வந்து மீன்பிடி தொழில் செய்ய சில வியாபாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனால் மீனவர் பிரச்சினையை தாண்டி மோதல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, வெளிமாவட்ட மீனவர்கள் இந்த பகுதியில் மீன்பிடிக்க வருவதற்கு தடைவிதிக்க வேண்டும். மேலும் வெளிமாவட்ட மீனவர்களின் படகுகளுக்கு முறைகேடான ஆவணங்களின் அடிப்படையில் உரிமம் வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

கடலாடி அருகே உள்ள பெரியகுளம் முன்னாள் ஊராட்சி தலைவர் அருணாசலம் அளித்த மனுவில், பெரியகுளம் ஊராட்சி பகுதியில் சென்னையை சேர்ந்த நிறுவனம் விவசாய நிலங்களை விலைக்குவாங்கி உப்பளம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள காக்கூர் பெரிய கண்மாயில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி மனுகொடுத்தனர். மரைக்காயர் பட்டணம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கிராமசபை கூட்டம் முறையான அறிவிப்பு செய்யாமல் நடத்தப்படுவதாகவும், தீர்மான நகல் தரப்படுவதில்லை என்றும் புகார் தெரிவித்து மனு கொடுத்தனர். மகர்நோன்பு பொட்டல் 3–வது தெருவை சேர்ந்தபொதுமக்கள் காவிரி குடிநீர் இணைப்பு டெபாசிட் தொகை செலுத்தி பெற்றுள்ள நிலையில் தண்ணீர் வரவில்லை என்று புகார் செய்தனர்.

ராமநாதபுரம் நகராட்சி பெரியார் நகர், கரும்புக்கொல்லை, கூரிச்சாத்த அய்யனார் கோவில் தெரு ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் வசதி செய்துதரக்கோரி மனு கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவ ராவ் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மீனவர்களை பாதிக்கும் வகையில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்படாது என்றும் அவர் உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்