தூத்துக்குடியில் குடோன் ஷட்டரை உடைத்து ரூ.46 லட்சம் முந்திரிக்கொட்டை திருட்டு ; மர்மநபர்களுக்கு வலைவீச்சு

தூத்துக்குடியில் குடோன் ஷட்டரை உடைத்து ரூ.46 லட்சம் மதிப்புள்ள முந்திரிக்கொட்டைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-10-15 21:30 GMT
தூத்துக்குடி, 

கேரளாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் சார்பில், வெளிநாடுகளில் இருந்து முந்திரிக்கொட்டை மூட்டைகள் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முந்திரிக்கொட்டை மூட்டைகள், தூத்துக்குடி- மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் பாலத்துக்கு மேற்கு பகுதியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த குடோனில் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த ராஜா லாரன்ஸ் (வயது 63) மேலாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், குடோனில் இருந்த முந்திரிக்கொட்டை மூட்டைகளை சரிபார்த்தபோது சுமார் ரூ.46 லட்சம் மதிப்புள்ள 500 மூட்டை முந்திரிக்கொட்டைகள் காணாமல் போய் இருந்தது. யாரோ மர்மநபர்கள் ஷட்டரை உடைத்து அவற்றை திருடி சென்றது தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து குடோன் மேலாளர் ராஜா லாரன்ஸ் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருமலை வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். 

மேலும் செய்திகள்