ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு - கலெக்டரிடம் கோரிக்கை
ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் பரிதவித்து வரும் மக்கள், குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.
கூட்டத்தில் மொத்தம் 402 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில், தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 38 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்து 740 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் ஆண்டிப்பட்டி ஒன்றியம் கோத்தலூத்து ஊராட்சிக்கு உட்பட்ட வரதராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் அடிப்படை வசதிகள் மற்றும் இலவச வீட்டுமனைபட்டா கேட்டு மனு அளித்தனர். அந்த மக்கள் கூறுகையில், ‘சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு 24 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கி வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். பொது கழிப்பிட வசதி இல்லை. கழிப்பிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். சமுதாயக்கூடம் கட்டிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை பாருடன் திறக்க முயற்சி நடந்தது. பொதுமக்கள் அனைவரும் திரண்டு தடுத்து நிறுத்தியதால் மதுபானம் ஏற்றி வந்த வாகனம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இங்கு மதுபான பாட்டில்களை இறக்கி, கடையை திறக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது. எனவே, மக்களின் நலன் கருதி இப்பகுதியில் மதுக்கடை திறக்கக்கூடாது’ என்று கூறியிருந்தனர்.
கொடுவிலார்பட்டி கிராம கமிட்டியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், ‘கொடுவிலார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குளம் கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கண்மாயை தூர்வார வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
பழங்குடி தமிழர் இயக்கம் சார்பில், மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்வதாகவும், வழக்குகளை ரத்து செய்யக்கோரியும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதுதொடர்பான மனுவை தமிழக முதல்-அமைச்சர், கவர்னர் ஆகியோருக்கு அனுப்புவதற்காக மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
ஆண்டிப்பட்டி ஒன்றியம் மொட்டனூத்து அருகில் உள்ள நாகுலகவுண்டன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எங்கள் ஊரில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. குடிநீருக்காக அலைந்து திரிந்து பக்கத்து ஊர்களில் இருந்து தண்ணீர் பிடித்து வருகிறோம். ஏற்கனவே எங்கள் ஊரில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்த மோட்டார் பழுதடைந்துள்ளது. அந்த மோட்டாரை சரி செய்யவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
தமிழ்ப்புலிகள் கட்சியின் கரும்புலி குயிலி பேரவை மாவட்ட செயலாளர் தமிழரசி தலைமையில் சிலர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள், தேனி ஆற்றங்கரை தெருவில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், பாதுகாப்பு வழங்க வேண்டும், மயானத்தில் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்தனர். சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் ஜெய்முருகேஷ் அளித்த மனுவில், ‘தேனி காமராஜர் பஸ் நிலையம் (பழைய பஸ் நிலையம்) எதிரே அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்கள், வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மதுக்கடை அருகில் மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. எனவே, இந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று கூறியிருந்தார்.