ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் பேரணி; கலெக்டரிடம் மனு கொடுத்தனர்

ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி திருப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-10-15 23:15 GMT

திருப்பூர்,

பரம்பிக்குளம்–ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் உடுமலை, பொள்ளாச்சி, பல்லடம் ஆகிய பகுதிகள் மட்டுமே ஆண்டு முழுவதும் 1 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டம் 4 மண்டலமாக பிரிக்கப்பட்டு வெள்ளகோவில் பகுதியில் உள்ள முத்தூர் வரை புதிய பாசன கால்வாய் அமைக்கப்பட்டது.

இதன் காரணமாக பாசன பகுதி 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கராக விரிவடைந்தது. இதைத்தொடர்ந்து பரம்பிக்குளம்–ஆழியாறு பாசன திட்டத்தில் 11 அணைகளில் ஒன்றான உப்பாறு அணைக்கு தண்ணீர் விடுவதை பொதுப்பணித்துறை முற்றிலும் நிறுத்திக்கொண்டது. இதனால் கடந்த 30 ஆண்டுகளாக பரம்பிக்குளம்–ஆழியாறு பாசன பகுதி விவசாயிகளுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்காமல், விவசாயம் செய்வதை அவர்கள் குறைத்துக்கொண்டனர். இதன்காரணமாக விவசாயம் செய்யும் பரப்பளவு குறைந்தது.

முன்று போக சாகுபடி என்ற நிலையில் இருந்து ஒரு போகம் சாகுபடி செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இதனால் பி.ஏ.பி. பாசன பகுதி விவசாயிகளின் தண்ணீர் தேவையை நிறைவேற்ற ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, பி.ஏ.பி. திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு பேரணி திருப்பூரில் நடைபெற்றது. திருப்பூர் வீரபாண்டி பிரிவில் இருந்து தொடங்கிய பேரணி கலெக்டர் அலுவலகம் வரை நடைபெற்றது.

இந்த பேரணியில் பி.ஏ.பி. திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், நிர்வாக குழு உறுப்பினர் கோபால், கொங்குநாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கொங்கு ராஜாமணி, தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் மு.பெ.சாமிநாதன், மடத்துக்குளம் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்வராஜ், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் கோபி மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் உள்பட விவசாய சங்கத்தினர், விவசாயிகள், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

பேரணியில் வந்தவர்கள் ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்றக்கோரி கோ‌ஷமிட்டபடி வந்தனர். மேலும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் கைகளில் ஏந்தியபடி வந்தனர். இதையொட்டி பல்லடம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும், அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகள் பேரணி வந்ததும், முக்கியமான விவசாய பிரதிநிதிகள் மட்டுமே உள்ளே மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலக அரங்கில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மகேந்திரன் எம்.பி. ஆகியோர் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

அப்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறும்போது, “ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை தமிழக அரசால் மட்டும் நிறைவேற்ற முடியாது. தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளதால், இதில் சில சிக்கல்கள் ஏற்பட்டு காலதாமதம் ஆகிறது. இருப்பினும் விரைவாக இந்த திட்டங்களை நிறைவேற்ற தமிழக முதல்–அமைச்சரிடம் வலியுறுத்தப்படும். மேலும், விவசாயிகள் முதல்–அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்“ என்றார்.

பரம்பிக்குளம்–ஆழியாறு பாசன திட்டத்தில் ஒட்டுமொத்த பகுதியும் பயன்பட வேண்டும் என்று 11 அணைகள் கட்ட திட்டமிட்டு கடந்த 1958–ம் ஆண்டு தமிழகம் சார்பிலும், கேரளா சார்பிலும் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி ஆனைமலை மற்றும் நல்லாறு அணைகள் கட்டப்படவில்லை. பி.ஏ.பி. திட்ட ஒப்பந்தப்படி கேரளா இடைமலையாறு என்ற அணையை கட்டிய பிறகு தான் தமிழகம் ஆனைமலையாறு அணையை கட்ட வேண்டும். ஆனால் கேரளா இடைமலையாறு அணையை கட்டி முடித்து, மின் உற்பத்தி செய்து வருகிறது. அணையின் கட்டிட பணிகள் முடியவில்லை என்று கூறி கேரள அரசு ஏமாற்றி வருவதால், இந்த திட்டத்தின் மூலமாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 2.5 டி.எம்.சி. தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்காமல் இருந்து வருகிறது.

மேலும், இடைமலையாறு அணையை கேரளா கட்டி முடித்தால், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 1–ந் தேதி முதல் ஜனவரி மாதம் 31–ந் தேதி வரை நீராறில் இருந்து கிடைக்கக்கூடிய 1.75 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் கேரளா அணை கட்டவில்லை என்று கூறி இந்த தண்ணீரையும் தர மறுக்கிறது. இதுபோல் நீராறில் இருந்து கிடைக்கும் தண்ணீரை 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைத்தால் அந்த தண்ணீர் நல்லாறு என்ற பகுதிக்கு வந்து சேரும். அங்கு சிறிய அணை கட்டி திருமூர்த்தி அணைக்கு தண்ணீரை எளிதாக கொண்டு சென்று பயன்படுத்த முடியும். இந்த திட்டம் தான் நல்லாறு அணைத்திட்டம். எனவே இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அணைகள் கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி தான் இந்த போராட்டம் நடைபெற்றது. ஒப்பந்தத்தின்படி தண்ணீர் கிடைத்தால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

மேலும் செய்திகள்