தாராபுரத்தில் தண்ணீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் தர்ணா
தாராபுரத்தில் தண்ணீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்,
தாராபுரம் நகராட்சி 1–வது வார்டில் இறைச்சி மஸ்தான் தெருவில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் தண்ணீர் தேவைக்காக நகராட்சி மூலம் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளன. குடிநீர் தேவை போக மற்ற தேவைகளுக்கு இந்த ஆழ்குழாய் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மின் மோட்டாரின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் கடந்த 3 மாதமாக இந்த பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினார்கள். இதுபற்றி நகராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை தாராபுரம் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் தர்ணாவில் ஈடுபட்டிருந்த பெண்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:–
எங்கள் பகுதியில் கடந்த 3 மாதமாக தண்ணீர் வினியோகம் செய்யவில்லை. எங்கள் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளன. ஆனால் அந்த சாலையையும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் கனரக வாகனங்கள் தெருவுக்குள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நோயாளிகளை அவசரகாலத்தில் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்வதற்கு உதவும், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் அந்த தெருவுக்குள் செல்ல முடிவதில்லை. எனவே இந்த வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அதற்கு, அதிகாரிகள் விரைவில் மின்மோட்டாருக்கு இணைப்பு வழங்கப்பட்டு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். இதைத்தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.