தூத்தூர் ஊராட்சியில் முறையான அறிவிப்பு கொடுத்து கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் பொதுமக்கள் மனு

தூத்தூர் ஊராட்சியில் முறையான அறிவிப்பு கொடுத்து கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2018-10-15 22:45 GMT
நாகர்கோவில்,

வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 315 மனுக்கள் கொடுத்தனர். அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கிய கலெக்டர், அவற்றின்மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

 இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி கிறிஸ்டோபர் ஜெயராஜ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தூத்தூர் ஊராட்சி இரையுமன்துறை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் தலைமையில் பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

தூத்தூர் ஊராட்சியில் கடந்த 2–ந் தேதி நடந்த கிராமசபை கூட்டம் முறையான முன்னறிவிப்புகள் எதுவும் இல்லாமலும், போதுமான மக்கள் பங்கேற்காமலும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் நடக்கவில்லை. அதன்பிறகு நடந்த சிறப்பு கிராமசபை கூட்டங்களும் அறிவிப்பு இல்லாமல் மறைமுகமாக நடந்தது. எனவே இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் ஆகியவை வலியுறுத்தும் விதிமுறைகளின்படி கிராம சபை கூட்டத்தை முறைப்படி நடத்த வேண்டும். கிராமசபையின் மாவட்ட ஆய்வாளர் என்ற முறையில் கலெக்டர் தலைமையில் தூத்தூர் ஊராட்சியில் மக்களுக்கு முறையான அறிவிப்பு கொடுத்து நடத்த வேண்டும். நடப்பு நிதி ஆண்டுக்கான வரவு– செலவு கணக்கை சமர்ப்பித்து கள ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயன் தலைமையில் கொடுத்த மனுவில், “கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட கூத்தாவிளை சந்திப்பில் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணறு இருந்தது. அந்த கிணறை சில வி‌ஷமிகள் மூடிவிட்டனர். இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது குடிநீர் கிணறு மற்றும் சுற்றுச்சுவரை காணவில்லை. பேரூராட்சி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கிணறை இடித்து மூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு உடந்தையாக செயல்படும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது விசாரணை நடத்தி துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்