5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் அனிதா குமாரசாமி இன்று மனுதாக்கல் செய்கிறார்

5 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை(செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.

Update: 2018-10-14 22:30 GMT
பெங்களூரு, 

5 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை(செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். ராமநகர் தொகுதியில் போட்டியிட அனிதா குமாரசாமி இன்று(திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

நாளை கடைசி நாள்

சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கியமான அரசியல் கட்சிகள் இதுவரை மனு தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில் மனு தாக்கல் செய்ய நாளை(செவ்வாய்க் கிழமை) கடைசி நாள் ஆகும். காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று(திங்கட்கிழமை) மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளன.

இடைத்தேர்தல் பணிகளை...

அதன்படி ராமநகர், மண்டியா, சிவமொக்கா ஆகிய 3 இடங்களில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், ஜமகண்டி, பல்லாரி ஆகிய 2 இடங்களில் காங்கிரசும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா 5 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.

இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க காங்கிரஸ் சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டியா தொகுதிக்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ், சிவமொக்கா தொகுதிக்கு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, ராமநகர் தொகுதிக்கு டி.கே.சுரேஷ் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தேவேகவுடா குடும்பத்தை...

மண்டியா, ராமநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு வழங்கும் முடிவை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். 50 ஆண்டுகாலமாக தேவேகவுடா குடும்பத்தை எதிர்த்து அரசியல் செய்துவிட்டு, இப்போது திடீரென அக்கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள் என்று சொன்னால் எப்படி என்று நிர்வாகிகள் கேட்கிறார்கள். அதற்கு காங்கிரஸ் தலைவர்கள், இது கட்சி மேலிடத்தின் முடிவு, அதை ஏற்று அனைவரும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

அனிதா குமாரசாமி

இதற்கிடையே ராமநகர் சட்டமன்ற தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் முதல்-மந்திரியின் மனைவி அனிதா குமாரசாமி இன்று(திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

மதியம் 1 மணியில் இருந்து 3 மணிக்குள் மனு தாக்கல் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொள்கிறார். இந்த நிலையில் நேற்று தேவேகவுடாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அனிதா குமாரசாமி நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

சித்தராமையா பிரசாரம்

இதேபோல், ஜமகண்டி சட்டமன்ற தொகுதியில், சாலை விபத்தில் மரணம் அடைந்த சித்துநியாமகவுடா எம்.எல்.ஏ. வின் மகன் ஆனந்த் நியாமகவுடா காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சித்தராமையா 3 நாட்கள் ஜமகண்டியில் தங்கி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் இன்று(திங்கட்கிழமை) ஜமகண்டிக்கு செல்கிறார். ஜமகண்டியில் பா.ஜனதா சார்பில் ஸ்ரீகாந்த் குல்கர்னி நிறுத்தப்படுகிறார். இவர் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவமொக்கா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா களம் காண்கிறார். மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் சிவராமேகவுடா களம் இறங்குகிறார். அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி டாக்டர் சித்தராமையா போட்டியிடுகிறார்.

இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கும்

ராமநகர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிடும் அனிதா குமாரசாமியை எதிர்த்து, பா.ஜனதா சார்பில் சந்திர சேகர் களம் காண்கிறார். இவர் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் எம்.பி. சாந்தா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்கிறார்கள். பல்லாரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. வேட்புமனு தாக்கலுக்கு பிறகு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்