விளையாட்டு வினையானது; மரத்தில் இருந்து கிணற்றில் குதித்த மாணவன் பலி

குளிப்பதற்காக மரத்தில் இருந்து கிணற்றில் குதித்தபோது கிணற்று சுவரில் தலை மோதியதில் படுகாயம் அடைந்த மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2018-10-14 18:49 GMT

வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வசந்த்(வயது 13). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று விடுமுறை என்பதால் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது கிணறு அருகே உள்ள தென்னைமரத்தில் ஏறி அதிலிருந்து கிணற்றுக்குள் தாவிதாவி குளித்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக வசந்த் மரத்தில் இருந்து குதித்தபோது கிணற்று சுவரில் அவனது தலை மோதியது. இதில் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு தண்ணீருக்குள் மூழ்கி அவன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து தவலறிந்த சோழவந்தான் தீயணைப்பு நிலைய அதிகாரி லட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு அவனது உடலை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்