ஆத்தூரில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளிக்கூட மாணவன் சாவு மகாபுஷ்கர விழாவில் நீராடியபோது பரிதாபம்
ஆத்தூரில் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவில் நீராடியபோது பள்ளிக்கூட மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
ஆறுமுகநேரி,
ஆத்தூரில் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவில் நீராடியபோது பள்ளிக்கூட மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
பள்ளிக்கூட மாணவன்
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக உள்ளார். இவருடைய மனைவி பிச்சம்மாள். இவர்களுக்கு 11 வயதில் அமுதசுகந்தன் என்ற மகனும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் அமுதசுகந்தன், பெருநாழியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று காலையில் ரங்கநாதன் தனது மனைவி, மகன்களுடன் திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக ராமநாதபுரத்தில் இருந்து பஸ்சில் புறப்பட்டு வந்தார். வரும் வழியில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலையத்தில் இறங்கிய அவர்கள், தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கர விழா நடப்பதால் அங்கு புனித நீராடிவிட்டு செல்ல முடிவு செய்தனர்.
மகாபுஷ்கர கமிட்டி சார்பில் ஆத்தூர் பகுதியில் பக்தர்கள் நீராட பாலத்திற்கு கீழ்புறம் உள்ள 2 படித்துறைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த இடங்களில் போலீசார், பாதுகாப்பு வீரர்கள் அனைவரும் தயார் நிலையில் இருந்தனர்.
தண்ணீரில் மூழ்கி...
ஆனால் இவர்கள் பாலத்திற்கு மேல்புறம் தெற்கு பகுதியில் நல்லப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள படித்துறையில் குளித்தனர். முதலில் சிறுவர்கள் 2 பேரையும் குளிக்க வைத்துவிட்டு அவர்களை கரையில் நிறுத்தி விட்டு, கணவன்-மனைவி இருவரும் ஆற்றில் குளிக்க சென்றனர்.
அப்போது பொதுமக்கள் பலர் ஆற்றில் குளித்து கொண்டு இருப்பதை பார்த்த அமுதசுகந்தன், தானும் மீண்டும் தண்ணீரில் இறங்கி குளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளான். அவன் பெற்றோருக்கு தெரியாமல் தண்ணீரில் இறங்கினான். அப்போது அவன் ஆழம் அதிகமாக உள்ள இடத்துக்கு சென்றதால், தண்ணீரில் தத்தளித்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அந்த பகுதியில் குளித்து கொண்டு இருந்தவர்கள் விரைந்து சென்றனர். அப்போது அவன் தண்ணீரில் மூழ்கினான். அவனை மீட்டு ஆற்றில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.
பெற்றோர் கதறல்
பின்னர் மயக்க நிலையில் இருந்த அவனை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக கூறினார். இதனை கேட்டு பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மாணவனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் அந்த படித்துறையில் ஆட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.