பெரம்பூரில் மர்ம காய்ச்சலால் 9-ம் வகுப்பு மாணவன் சாவு

பெரம்பூரில், மர்ம காய்ச்சலால் 9-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-10-14 22:30 GMT
பெரம்பூர்,

சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை எஸ்.எஸ்.வி. கோவில் 1-வது தெருவைச் சேர்ந்தவர் நிசார் அகமது. இவருடைய மனைவி சாய்னா பீவி. இவர்களுடைய மகன்கள் ரிஷ்வான் (வயது 13), ரியாஸ், மகள் ரேஷ்மா.

ரிஷ்வான், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த வாரம் முதல் காய்ச்சல் ஏற்பட்டு மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் ரியாஸ் மற்றும் ரேஷ்மாவுக்கும் காய்ச்சல் ஏற்பட்டது.

ரிஷ்வானுக்கு காய்ச்சல் அதிகமானதால் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது போல் தெரிவதாக கூறி மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறினர்.

அதன்படி ரிஷ்வானை கடந்த 9-ந் தேதி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் ரியாஸ், ரேஷ்மாவுக்கும் காய்ச்சல் தீவிரமானதால் அவர்களையும் அங்கேயே சேர்த்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் அங்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் ரிஷ்வான் பரிதாபமாக இறந்தார். ஆனால் மருத்துவர்கள், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தும், மர்ம காய்ச்சலால் ரிஷ்வான் இறந்துவிட்டதாக கூறி தங்கள் மகனின் உடலை தங்களிடம் ஒப்படைத்ததாக ரிஷ்வானின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

தங்கள் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாலும், மழைநீர் தேங்கி நிற்பதாலும் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவுவதாக கூறி அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் அரிகுமார், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் அவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.

இதையடுத்து சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை இணை இயக்குனர் மதுசூதனன் ரெட்டி, திரு.வி.க நகர் 6-வது மண்டல அதிகாரி ஆனந்தகுமார், மண்டல சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சரஸ்வதி ஆகியோர் அங்கு வந்து, தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுமாறும், அந்த பகுதியில் கழிவுநீர் தேங்காமல் பார்க்கவும், மருத்துவ குழு அமைத்து இப்பகுதியில் உள்ள அனைவருக்கும் ரத்தப்பரிசோதனை செய்து டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனே அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்