அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்கள் மனித சங்கிலி; பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்கள் மனித சங்கிலியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Update: 2018-10-14 22:45 GMT

ராமேசுவரம்,

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு ராமேசுவரத்தில் அவரது கனவை நிறைவேற்றும் விதமாகவும்,தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தியும், ராமேசுவரம் பகுதியில் சாலைகளையும்,கோவில் பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்கவும்,குப்பைகளை கண்டஇடங்களில் போடாமல் குப்பை தொட்டிகளில் போடவேண்டும்.

புண்ணிய தலமான ராமேசுவரம் பகுதியை பொது மக்களும்,இங்கு வரும் சுற்றுலாபயணிகளும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கலாசார புராதன சின்னங்களை பாதுகாக்கவேண்டும், பிளாஸ்டிக் பைகளை யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தியும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராமேசுவரம் தீவுஅபிவிருத்திகுழு மற்றும் பசுமை ராமேசுவரம் சார்பில் மாணவர்கள் மனித சங்கிலி நிகழ்ச்சியானது நடைபெற்றது.

தங்கச்சிமடம் பேய்க்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து தொடங்கிய மனித சங்கிலியை மாவட்ட கலெக்டர் வீரராகராவ் முன்னிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இதில் ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ–மணவிகள் மனித சங்கிலியாக அப்துல்கலாம் நினைவிடம் முதல் ராமேசுவரம் பஸ் நிலையம் வரை மனித சங்கிலியாக நின்றனர். பின்னர் அனைவரும் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதில் நகராட்சி மண்டல இயக்குனர் ஜானகி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹெட்சி லீமா அமலினி, ஊராட்சி உதவி இயக்குனர் செல்லதுரை,பசுமை ராமேசுவரம் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன், பா.ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் சுப.நாகராஜன், மாவட்ட தலைவர் முரளிதரன்,செயலாளர் ஆத்மகார்த்திக், பசுமை ராமேசுவரம் திட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மனித சங்கிலி நிகழ்ச்சியின்போது ராமநாதபுரம் ஜவகர் அரசு இசைப் பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவ–மாணவிகள் சிலம்பாட்டம், பொய்க்கால் நடனத்துடன் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்,மாவட்ட கலெக்டர் வீரராகராவ் ஆகியோர் அப்துல்கலாம் நினவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்