பேரையூர் தாலுகாவில் போதிய மழை பெய்யாத நிலையில் தாமதமாகும் நெல் விவசாயம்; விவசாயிகள் கவலை

பேரையூர் தாலுகாவில் போதிய மழை பெய்யாத நிலையில் நெல் விவசாயம் செய்வது தாமதம் ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2018-10-14 22:15 GMT

பேரையூர்,

பேரையூர் தாலுகாவில் கடந்த மாதம் பெய்த மழையால் மானாவாரி விவசாயம் தற்போது நடைபெற்று வருகிறது. மானவாரிக்கு தேவையான மழை பெய்த நிலையில் இப்பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து வரவில்லை. அவ்வப்போது மழை பெய்ததால் குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கி நிற்கவில்லை.

இந்த தாலுகாவில் 76 சிறிய, பெரிய பாசன கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் 40 முதல் 60 நாட்கள் தண்ணீர் இருந்தால் மட்டுமே விவசாயிகள் நெல் விவசாயம் செய்வார்கள். கிணற்று பாசனத்தை நம்பி கடலை உள்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்வார்கள்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையை சுற்றி உள்ள பகுதிகளில் பெய்த மழை கூட பேரையூர் தாலுகாவில் பெய்யவில்லை. வானம் பார்த்த பகுதியாக பேரையூர் தாலுகா உள்ளதால் பருவ மழையை மட்டுமே நம்பி உள்ளது. நன்றாக பருவ மழை பெய்து கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து இருந்தால் மட்டுமே முழு அளவில் நெல் விவசாயம் நடைபெறும். ஆனால் போதிய மழை பெய்யாத நிலையில் நெல் விவசாயம் தாமதமாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாகவே பேரையூர் தாலுகாவில் உள்ள கண்மாய்கள் நிரம்பவில்லை. தற்போது பெய்து உள்ள ஓரளவு மழையால் தரைதளம் நல்ல ஈரப்பதத்தில் உள்ளது. மேலும் தொடர்ந்து பருவ மழை பெய்யும்போது கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து இருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்