தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி பாபநாசத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி பாபநாசத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி புஷ்கர விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது. போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க போலீசார் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை போலீசார் அனுமதித்து உள்ள இடத்தில் மட்டுமே நிறுத்தவேண்டும். பாபநாசம் பகுதியில் நடக்கின்ற புஷ்கர விழாவிற்கு வருகின்ற பொதுமக்களின் வசதிக்காக அகஸ்தியர்பட்டியில் இருந்து பாபநாசம் கோவிலுக்கு தொடர்ச்சியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தாமிரபரணி ஆற்றில் நீராட வரும் மக்கள், ஆற்றில் உள்ள ஆபத்தான பகுதிக்கு செல்ல வேண்டாம். வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்ற நேரத்தில் ஆற்றுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஆற்றில் சோப்பு, ஷாம்பு பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
தாமிரபரணி புஷ்கர விழாவுக்காக வேள்விகள் நடைபெறும் யாகசாலைகளுக்கு தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று பெற்று உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். அன்னதானம் வழங்கப்படும்போது தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்று அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். போலீஸ் அனுமதி பெற்று உரிய நேரத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.