நெல்லையில் கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்

நெல்லையில் கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-10-09 21:30 GMT
நெல்லை, 


நெல்லை பேட்டையை சேர்ந்தவர் முகமது சித்திக் (வயது 35). இவரும், இவருடைய நண்பர் மேலப்பாளையத்தை சேர்ந்த ரசூல்மைதீன் (32) நேற்று மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டையில் இருந்து பேட்டைக்கு சென்றனர். ரசூல் மைதீன் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார்.

இவர்கள் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு வந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் முகமது சித்திக், ரசூல்மைதீன் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ்காரர் இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் முதலுதவி செய்தனர்.

பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு இருந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தனது காரை கொடுத்து, கட்சி நிர்வாகிகள் 2 பேரை அழைத்து படுகாயம் அடைந்த முகமது சித்திக், ரசூல்மைதீனை ஏற்றிக்கொண்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கூறினார். உடனே காரில் அவர்களை ஏற்றி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்