விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பயோ மெட்ரிக் கதவுகளை அகற்ற வேண்டும்; ஐகோர்ட்டில் வழக்கு

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பயோ மெட்ரிக் கதவுகளை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Update: 2018-10-09 22:00 GMT

மதுரை,

விருதுநகர் மாவட்டம், சத்திரப்பட்டியைச் சேர்ந்த ஜெயபாரதி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 18 துறை அலுவலகங்கள், வங்கி, தபால் அலுவலகம் ஆகியவை உள்ளன. இங்கு நாள் தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 4 நுழைவு வாயில்களில் 2–ல் மட்டும் பயோமெட்ரிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாயில்களில் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே நுழைய முடியும்.

எனவே வெளியில் இருந்து வருபவர்கள் அங்குள்ள மற்றொரு சிறிய கதவு வழியாக கடும் சோதனைக்கு பின்னர் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல தரப்பட்டவர்களும் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்தில் தலைமை செயலகம் மற்றும் வேறு எந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பயோ மெட்ரிக் கதவுகள் பொருத்தப்பட வில்லை. இந்த கதவுகளால் அவசர காலங்களின்போது வெளியே வர முடியாதநிலை உள்ளது. எனவே விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாயில்களில் பொருத்தப்பட்டுள்ள பயோ மெட்ரிக் கதவுகளை அகற்ற உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பயோ மெட்ரிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது பற்றி கூடுதல் அட்வகேட் ஜெனரலின் கருத்தை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கினை வருகிற 22–ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்