காரை சேதப்படுத்தியதாக வழக்கு: கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது

நெற்கட்டும்செவலில் காரை சேதப்படுத்திய வழக்கில் கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு முன்ஜாமீன் வழங்கியும், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நேற்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-10-09 22:30 GMT

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் கடந்த 2017–ம் ஆண்டு பூலித்தேவன் பிறந்தநாள் விழாவின்போது பல்வேறு தரப்பினர் மாலை அணிவிக்க வந்தனர். அந்த நேரத்தில் தமிழ்நாடு தேவர் பேரவையின் மாநில தலைவர் முத்தையா தலைமையில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது எனது வாகனம் தடையாக இருப்பதாக கூறப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு அங்கிருந்து வந்து விட்டோம்.

அன்று மதியம் நானும் எனது ஆதரவாளர்கள் மற்றும் அடையாளம் தெரியாத 30 பேர் சேர்ந்து முத்தையாவின் காரை சேதப்படுத்தியதாக தமிழ்நாடு தேவர் பேரவையை சேர்ந்த சுப்பையாபாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் புளியங்குடி போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் என்னை போலீசார் கைது செய்ய முயற்சி செய்கின்றனர். எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கனவே ஐகோர்ட்டு மறுத்தது.

இந்தநிலையில் அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “சுப்பையாபாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் புளியங்குடி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட சம்பவத்தின்போது கருணாஸ் அங்கு இல்லை என்று சுப்பையாபாண்டியன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்படி இருந்தும் வழக்கில் மனுதாரர் சேர்க்கப்பட்டு உள்ளார். வழக்குபதிவு செய்து ஒரு ஆண்டு கழித்து இப்போது அந்த வழக்கில் போலீசார் மனுதாரரை கைது செய்ய முயற்சி செய்து வருகின்றனர்“ என்று வாதாடினார்.

“ஓராண்டுக்கு முன்பு போடப்பட்ட வழக்கில் மனுதாரரை இப்போது கைது செய்ய அவசரம் காட்டுவது ஏன்?“ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதைதொடர்ந்து, கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்