வாலிபருடன் மாயமான பெண் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்; 4 பிள்ளைகள் கதறி அழைத்தும் உதறிவிட்டு சென்றதால் பரபரப்பு

வாலிபருடன் மாயமான பெண்ணை மதுரை ஐகோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். 4 பிள்ளைகள் கதறி அழைத்தும் அவர்களுடன் அந்த பெண் செல்லாமல் உதறிவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-09 22:15 GMT

மதுரை,

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த திருநாமச்செல்வன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது:–

எனது மனைவி கலாராணி. எங்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இந்தநிலையில் என் மகளின் திருமணத்துக்காக வீட்டில் வைத்து இருந்த பணம், நகைகளை எடுத்துக்கொண்டு எனது மனைவி திடீரென மாயமானார். இதுபற்றி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தேன். இதுவரை எனது மனைவியை கண்டுபிடிக்கவில்லை.

எனது மனைவியை திட்டமிட்டு ஒரு கும்பல் கடத்தி உள்ளது. அந்த கும்பல் என் மனைவி மூலமாக என்னிடம் மேலும் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். எனவே அவர்களிடம் இருந்து எனது மனைவியை மீட்டு ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரின் மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் போலீசார் பல இடங்களில் தேடி கலாராணியை மீட்டனர்.

பின்னர் அவரை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது அவர், தன்னுடைய விருப்பத்தின்பேரில் சதீஷ்குமார் (வயது 30) என்பவருடன் சென்றதாகவும், மீண்டும் அவருடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் மனுதாரரின் வக்கீல் எம்.ஆர்.சீனிவாசன் ஆஜராகி, “மனுதாரரின் மனைவியை திட்டமிட்டு கடத்தி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் வக்கீல் ஒருவர் உள்ளார். அவரது தூண்டுதலின்பேரில்தான் சதீஷ் செயல்பட்டுள்ளார். கலாராணி மூலம் மனுதாரரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கிறார்கள்“ என்று வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள், “கலாராணி மாயமான விவகாரத்தின் பின்னணியில் ஒரு கும்பல் செயல்படுவதை அறிய முடிகிறது. எனவே கலாராணியுடன் சென்ற சதீசை கண்டுபிடித்து போலீசார் ஆஜர்படுத்த வேண்டும். அவருக்கு பின்புலமாக உள்ள வக்கீலை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்“ என்று உத்தரவிட்டனர்.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணைக்காக மனுதாரர் திருநாமச்செல்வன் மற்றும் அவரது பிள்ளைகள் 4 பேரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் கலாராணியை தங்களுடன் வருமாறு அழைத்து கதறி அழுதனர். இது கோர்ட்டு வளாகத்தில் இருந்தவர்களின் மனதை உருக்குவதாக அமைந்தது. ஆனால் அந்த பெண் அதை பொருட்படுத்தாமல் உதறிவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்