மதுரையில் பரபரப்பு: பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற பெண் என்ஜினீயர்

மதுரையில் பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, பெண் என்ஜினீயர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-10-09 23:15 GMT

மதுரை,

மதுரை ஜெய்ஹிந்த்புரம், மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் சரவணசுந்தரம். ஓட்டல் தொழிலாளி. அவருடைய மூத்த மகள் முத்துமாரி (வயது 27), என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். கடந்த 2014–ம் ஆண்டு இவருக்கும், கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் செந்தில்குமாருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுடைய 3 வயது பெண் குழந்தை விசாகா.

செந்தில்குமார் சென்னையில் வேலை பார்த்து வருவதால், முத்துமாரி சில நாட்களாக குழந்தையுடன் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலையில் முத்துமாரி மற்றும் அவரது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துமாரியின் குடும்பத்தினர் தேடினர். பின்னர் வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் விசாகாவும், அவரது அருகில் உயிருக்கு போராடிய நிலையில் முத்துமாரியும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினர்.

அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்று பார்த்த போது, கழுத்து அறுபட்ட நிலையில் குழந்தை விசாகா இறந்து கிடந்தது. அருகில் முத்துமாரியும் கையில் கத்தியால் அறுத்துக்கொண்டு, வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முத்துமாரியின் உயிரை காப்பாற்ற அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கணவர் செந்தில்குமார் சென்னையில் வேலை பார்த்து வருவதால் முத்துமாரியும், குழந்தையும் மதுரையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு முத்துமாரியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. எனவே அவரை மனநல மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

குழந்தையை வருகிற விஜயதசமி அன்று பள்ளியில் சேர்ப்பதாக இருந்துள்ளார். இந்த நிலையில்தான் குழந்தையை நள்ளிரவில் மாடிக்கு தூக்கி சென்று கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தானும் வி‌ஷத்தை குடித்தும் கத்தியால் கையை அறுத்துக்கொண்டும் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

மனநலம் பாதிக்கப்பட்டதால்தான் என்ஜினீயர் முத்துமாரி தனது குழந்தையை கொடூரமாக கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது குழந்தையை பெற்றோர் வி‌ஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குள் மதுரையில் நடந்த இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்