கோவில்பட்டி அருகே, பஸ் சக்கரத்தில் சிக்கி கார் புரோக்கர் பலி : நிறுத்தத்தில் இறங்கியபோது பரிதாபம்

கோவில்பட்டி அருகே நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய கார் புரோக்கர் சகதியில் வழுக்கி விழுந்ததால், அதே பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி பலியானார்.

Update: 2018-10-09 22:00 GMT
கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இருளப்பன். இவருடைய மகன் சங்கர நாராயணசாமி (வயது 45). கார் புரோக்கர். மேலும் இவர் பழைய கார்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவில் தொழில் விஷயமாக, கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் உள்ள ஒருவரை பார்ப்பதற்காக, சங்கரன்கோவில் செல்லும் தனியார் பஸ்சில் புறப்பட்டு சென்றார்.

வானரமுட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றதும், அவர் பஸ்சின் முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே இறங்கினார். அப்போது மழை பெய்ததில் சாலையோரம் சேறும் சகதியாக இருந்தது. அதில் இறங்கிய அவர் எதிர்பாராதவிதமாக வழுக்கி சாலையில் விழுந்தார்.

இருளில் இதனை கவனிக்காத டிரைவர் உடனே பஸ்சை இயக்கினார். இதில் பஸ்சின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பயணிகள் கூச்சலிட்டதால் பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த சங்கர நாராயணசாமியின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பருவக்குடி நடுத்தெருவைச் சேர்ந்த அன்னபாக்கியம் மகன் சங்கரமூர்த்தி (38), பஸ் கண்டக்டரான மானூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வீரபுத்திரன் மகன் சுப்பிரமணியன் (46) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

விபத்தில் இறந்த சங்கர நாராயணசாமிக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், சஞ்சய் (16) என்ற மகனும், மீனா (14) என்ற மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்