குலசேகரம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி தி.மு.க.வினர் மறியல் எம்.எல்.ஏ. உள்பட 105 பேர் கைது

குலசேகரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-09 23:00 GMT
குலசேகரம்,

குலசேகரம் அரசமூடு சந்திப்பில் இருந்து தடிக்காரன்கோணம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும்– குழியுமாக காணப்படுகிறது. சாலையின் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த குழிகள் சரிவர மூடப்படாததால் கடந்த ஒரு வாரமாக இந்த வழிதடத்தில் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தி.மு.க. சார்பில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று குலசேகரம் அருகே பொன்மனை சந்திப்பில் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் கூடினர். தொடர்ந்து சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன.

இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி லால் கிறிஸ்டோபர்,  நிர்வாகிகள் ஜாண்பிரைட், ஜாண்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. உள்பட 105 பேரை கைது செய்து அரசமூடு சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்