மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி மற்றொருவர் படுகாயம்

மத்தூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-10-08 22:15 GMT
மத்தூர்,

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள காடம்பரஅள்ளியை சேர்ந்தவர்கள் மாது (வயது 55). கோபால் (60). கூலித்தொழிலாளர்கள். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் வந்தனர்.

பிறகு அவர்கள் இரவில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மத்தூர் அருகே சமத்துவபுரம் பக்கமாக அவர்கள் சென்ற போது எதிரே தர்மபுரியில் இருந்து வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

தலையில் பலத்த காயம் அடைந்த மாது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோபால் பலத்த காயத்துடன் போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்