நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா நாளை மறுநாள் தொடங்குகிறது: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார்.

Update: 2018-10-08 21:45 GMT
நெல்லை, 

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்தார். விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த மகா புஷ்கர விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி, 23-ந் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவையொட்டி சிருங்கேரி, காஞ்சி மடங்கள், துறவிகள் சங்கம், சித்தர்கள் கோட்டம், தாமிரபரணி புஷ்கர ஒருங்கிணைப்பு குழு உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றன.

நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்தம், செப்பறை கோவில், மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித்துறைகள் முற்றிலும் புதுப்பித்து கட்டப்பட்டு உள்ளன. மேலும் பல்வேறு படித்துறைகள் புதுப்பிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு உள்ளன. புஷ்கர விழாவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். மேலும் அவர் திருப்புடைமருதூர், நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் ஆகிய இடங்களில் நடைபெறும் புஷ்கர விழாக்களிலும் பங்கேற்கிறார். இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவையொட்டி போலீஸ் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் கடந்த 6-ந் தேதி இரவு நெல்லைக்கு வந்தார். அவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் கடந்த 2 நாட்களாக நெல்லையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் பாபநாசம் படித்துறைகள், அங்கு செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து போலீஸ் ஐ.ஜி.சண்முகராஜேசுவரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் நேற்று நெல்லை பகுதியில் உள்ள படித்துறைகளுக்கு போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் வந்தார். நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, ஜடாயு தீர்த்த படித்துறை, மணிமூர்த்தீசுவரம் படித்துறை உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அவர், புஷ்கர விழாவுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்கு வசதியாக ஆற்றுக்குள் பாதுகாப்பு வளையம் அமைக்க உத்தரவிட்டார். இது தொடர்பாக விழா குழுவினர் ஏற்கனவே ஆற்றுக்குள் உள்ள ஆழம் குறித்தும், எந்தெந்த இடங்களில் எத்தனை அடி தூரம் வரை பக்தர்களை அனுமதிப்பது என்றும் ஆய்வறிக்கை தயார் செய்துள்ளனர். அந்த ஆய்வறிக்கைகளையும் அவர் பார்த்தார். மேலும் அங்கு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் பக்தர்கள் ஆற்றுக்குள் செல்ல முடியாத வகையில் இரும்பு கம்பிகளை நிறுவி, இரும்பு வலைகளை கட்டி பாதுகாப்பு வளையம் அமைக் கும் பணியை உடனடியாக தொடங்கவும் உத்தரவிட்டார்.

அவருடன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்திரகுமார் ரத்தோட், துணை கமிஷனர்கள் சுகுணாசிங் (சட்டம்-ஒழுங்கு), பெரோஸ்கான் அப்துல்லா (குற்றம்-போக்குவரத்து) ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்