சேலம்: கொண்டலாம்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சேலம் கொண்டலாம்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2018-10-07 23:02 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

அதன்படி, சேலம் மேற்கு தாலுகாவுக்கு உட்பட்ட கோனேரி ஓடை, சேலம் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட பி.நாட்டாமங்கலம் ஏரி, நெய்க்காரப்பட்டி ஏரி மற்றும் ஓடை, சங்ககிரி காவிரி ஆற்றங்கரை, எடப்பாடி சரபங்கா நதி, ஆத்தூர் வசிஷ்ட நதி, கெங்கவல்லி நடுவலூர் ஓடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் நேற்று சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

அங்கு சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாயின் மேற்பகுதியில் கடைக்காரர்கள் சிலாப்புகள் போட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இதைத்தொடர்ந்து சாக்கடை கால்வாய்கள் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூர்வாரப்பட்டது.

கொண்டலாம்பட்டியில் நடந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும்போது, நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும். மக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.

மேலும், அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 37-வது வார்டு ராமநாதபுரம் ஓடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்