மோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதி பிளஸ்-2 மாணவர் பலி

ஓசூரில் மோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதி பிளஸ்-2 மாணவர் பலியானார்.

Update: 2018-10-07 22:15 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்தம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கலைவாஷிங்டன். இவரது மகன் ஹரிகரன் (வயது 18). இவர் ஓசூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவர் ஹரிகரன் மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு ஓட்டல் அருகில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மாணவர் ஹரிகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார் அங்கு சென்று விபத்தில் பலியான ஹரிகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்