தொடர் மழையால் நிரம்பிய அய்யனார்கோவில் ஊருணி
வாலாந்தரவை ஊராட்சி உடைச்சியார்வலசையில் உள்ள அய்யனார்கோவில் குடிநீர் ஊருணி கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் நிரம்பியுள்ளது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்டது உடைச்சியார்வலசை கிராமம். இந்த ஊரின் பஸ் நிறுத்தம் அருகே அய்யனார் கோவில் ஊருணி அமைந்துள்ளது. இந்த ஊருணி தண்ணீரைத்தான் உடைச்சியார்வலசை, தெற்குவாணி வீதி, ஏந்தல், ஆலாப்புளி, மொட்டையன்வலசை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் ராமநாதபுரம்–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள இந்த ஊருணி அமைந்துள்ளதால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் இங்கு தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனையொட்டி சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் சாலையோரத்தில் குடிநீர் ஊருணி என்ற பெயர் பலகையும் அங்கு வைக்கப்பட்டு உள்ளது.
கோடைகாலத்திலும் வற்றாமல் அப்பகுதி மக்களின் தாகம் தணித்து வந்த இந்த ஊருணியில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் தண்ணீர் வற்றி காணப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அய்யனார் கோவில் ஊருணி வேகமாக நிரம்பியது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். மேலும் ஊருணியை சுற்றிலும் உள்ள தடுப்புச்சுவர்கள் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளது. எனவே அவற்றை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.