பெரியகுளத்தில் அறிவிக்கப்படாத மின்தடை பொதுமக்கள் அவதி
பெரியகுளம் நகர் பகுதியில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
பெரியகுளம்,
பெரியகுளம் நகர் பகுதியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள், பள்ளிகள், வங்கிகள் உள்பட முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அறிவிக்கப்படாமல் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மாணவ, மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பெரியகுளம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்க மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.