பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் உபரிநீர் திறக்கப்படும் - கலெக்டர் கதிரவன் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் பருவமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகமாகும். பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் உபரிநீர் திறந்து விடப்படும். தற்போது வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாக 113 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பவானி கூடுதுறையில் இருந்து கொடுமுடி வரை உள்ள ஆற்றங்கரை பகுதிகளில் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மழை வெள்ளம் பாதிப்புகளை பொதுமக்கள் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், கோவை, நீலகிரி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரையும் அவசர தேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ரேஷன் கடைகளில் 3 மாதங்களுக்கு தேவையான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனுக்குடன் உணவு பொருட்களை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.