தமிழகம் முழுவதும் மக்கள் நீதிமன்றம் மூலம் 1 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு; ஐகோர்ட்டு நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் பேச்சு

தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் மக்கள் நீதிமன்றம் மூலம் 1 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக சென்னை ஐகோர்ட்டு ஹூலுவாடி ரமேஷ் ஊட்டியில் நடைபெற்ற விழாவில் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-10-07 23:00 GMT

ஊட்டி,

ஊட்டியில் மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் கலந்து கொண்டு கூடுதல் மகளிர் நீதிமன்றத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சதீஷ்குமார், பொங்கியப்பன், நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் பேசியதாவது:–

தமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டில் மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரு லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. குடும்ப பிரச்சினைகளை சமரசம் செய்து தீர்த்து வைக்க நீதிமன்றங்கள் குறைவாக உள்ளதால், தற்போது புதியதாக நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போது, நீதிமன்றத்துக்கு ஏற்படும் சுமை மற்றும் வழக்கின் தேக்கம் குறையும்.

நீலகிரி மாவட்டம் சிறந்த கல்வி அளிக்கும் மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. நீலகிரியில் படித்து நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் வக்கீல்கள் தமிழக அரசு நடத்தும் தேர்வை எழுதி வெற்றி பெற்று நீதிபதிகளாக வர வேண்டும். நீலகிரியை சேர்ந்தவர்கள் தான் நீதிபதி பணியில் மிக குறைவாக உள்ளனர். எனவே நீதிபதிக்கான தேர்வு எழுத இளம் வக்கீல்கள் தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து நீதிபதி சதீஷ்குமார் பேசியதாவது:–

இளம் வக்கீல்கள் தங்களுக்கான தகுதிகள், அறிவை வளர்த்துக்கொண்டு சமூகத்துக்கு அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒவ்வொரு வீட்டில் இருந்தும் தொடங்குகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சொல்வது இல்லை. இது தவிர்க்கப்பட வேண்டும். வழக்குகளின் நிலையை புரிந்துகொண்டு நீதிபதிகள் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன், நீலகிரி மாவட்ட வக்கீல் சங்க தலைவர் ஸ்ரீஹரி, செயலாளர் பீமராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்