கேரள மாநிலத்துக்கு வாகனங்கள் செல்ல தடை: பால் வியாபாரிகள் சாலை மறியல்

கேரள மாநிலத்துக்கு இருசக்கர வாகனங்களில் செல்ல போலீஸ் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதால் லோயர்கேம்ப் பஸ் நிறுத்தம் முன்பு குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பால் வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-07 22:15 GMT

கூடலூர்,

கூடலூர் அருகே லோயர்கேம்ப்–குமுளி மலைப்பாதையில் கடந்த மாதம் பலத்த மழை காரணமாக மாதாகோவில் அருகே சாலை வளைவுகளிலும் மற்றும் இரைச்சல் பாலம் அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி வாகன போக்குவரத்தை சீரமைப்பு பணி மேற்கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பலத்த மழையினால் மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த 23–ந் தேதி முதல் லோயர்கேம்ப்பில் இருந்து குமுளி மலைப்பாதையில் அனைத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் சாலையின் குறுக்கே சீரமைக்கும் பணிக்காக ஜல்லிகற்கள் குவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்துக்கு வியாபாரம் மற்றும் கூலிவேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பால் வியாபாரிகள் அவதிப்பட்டு வந்தனர். குமுளி மலைப்பாதையில் செல்ல முடியாததால், கூடலூர், லோயர்கேம்ப் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த பால் வியாபாரிகள் 30–க்கும் மேற்பட்டோர் சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் கம்பம்மெட்டு வழியாக கேரள மாநிலத்துக்கு சென்று வந்தனர்.

இதில் நீண்ட தூரம் சென்று பால் விற்பனை செய்வதால் அடிக்கடி பால் கெட்டு விடுவதாகவும், கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் கூறி, குமுளி மலைப்பாதை வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். மேலும் கடந்த 26–ந் தேதி நடுரோட்டில் பாலை கொட்டி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு பிறகு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று காலை லோயர்கேம்ப் பஸ் நிறுத்தம் முன்பு 30–க்கும் மேற்பட்ட பால் வியாபாரிகள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த லோயர்கேம்ப் போலீஸ்நிலைய சப்–இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ் ராஜா விரைந்து சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வாகனங்கள் செல்ல மாற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், அவர்கள் குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்