திருவள்ளூரில் பள்ளியை சுத்தமாக வைக்காததால் ரூ.10 ஆயிரம் அபராதம் கலெக்டர் நடவடிக்கை

திருவள்ளூரில் பள்ளியை சுத்தமாக வைக்காததால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.

Update: 2018-10-07 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று திருவள்ளூர் ஜட்ஜஸ் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ஜட்ஜஸ் காலனி பகுதிக்கு சென்று அங்கு பொதுமக்களிடம் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து பராமரிக்க வேண்டும். அன்றாடம் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் மக்கும் குப்பை , மக்காத குப்பைகளில் போட்டு விடவேண்டும் என அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அவர் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் திறந்த வெளியில் கிடக்கும் டயர்கள், குடிநீர் தொட்டிகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பள்ளியில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி அசுத்தமாக காட்சியளித்தது.

இதனை கண்ட கலெக்டர் பள்ளியை சுத்தமாக வைத்துக்கொள்ளாததால் அந்த பள்ளிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த ஆய்வின் போது சப்-கலெக்டர் ரத்னா, திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், நகராட்சி ஆணையர் முருகேசன் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்