பேஷன் டிசைனர் பலியான வழக்கில் திருப்பம் : தாயின் சாவுக்கு காரணமான மகன் கைது

அந்தேரி பேஷன் டிசைனர் பலியான வழக்கில் திடீர் திருப்பமாக அவரை தள்ளிவிட்டு சாவிற்கு காரணமாக இருந்த மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-10-06 22:56 GMT
மும்பை,

அந்தேரி லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வந்தவர் பேஷன் டிசைனர் சுனிதா சிங் (வயது 45). இவருடன் மகன் லக்சயா மற்றும் அவரது வருங்கால மனைவியும் வசித்து வந்தனர். இந்தநிலையில், சுனிதா சிங் வியாழக்கிழமை காலை வீட்டின் குளியல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மகன் லக்சயா, அவர் குளியல் அறையில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக கூறினார். மேலும் அவர் பல தகவல்களை முன்னுக்கு பின் முரணாக தெரிவித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில், லக்சயா தாய் சுனிதா சிங்கை தள்ளிவிட்டதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

சம்பவத்தன்று நள்ளிரவு தாய், மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லக்சயா, தாயை தள்ளி உள்ளார். அப்போது குளியல் அறை வாஷ் பேஷனில் தலை இடித்து அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார். தாயின் சாவிற்கு காரணமாக இருந்த அவரது மகன் லக்சயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்