சாலையில் நாற்றுநட்டு கிராம மக்கள் போராட்டம்

கமுதி பகுதியில் சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-06 22:54 GMT

கமுதி,

கமுதியில் இருந்து இடைச்சியூரணி, பெருமாள்தேவன்பட்டி, வடுகபட்டி, மூலக்கரைபட்டி, முத்துப்பட்டி வழியாக அம்மன்பட்டி கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இருந்தது. இந்த சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெயரளவில் சீரமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் அந்த சாலை சேதமடைந்தது.

இதனால் வடுகபட்டி அருகே உள்ள விலக்கு ரோட்டில் வீடுகளில் இருந்து வெளியேறும் மழைநீர் தேங்கி சாலை சேதமடைந்து இருக்கும் இடம் தெரியாமல் உருக்குலைந்துள்ளது. மேலும் வடுகபட்டி, மூலக்கரைபட்டி, அம்மன்பட்டி, முத்துப்பட்டி ஆகிய ஊர்களுக்கு வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், கமுதி யூனியன் அதிகாரிகள் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுதவிர மழைநீர் செல்வதற்கு மூலக்கரைபட்டியில் வரத்து கால்வாயும் அமைக்கப்படவில்லை. இதனால் மூலக்கரைபட்டி, வடுகபட்டி கிராம மக்கள் சகதியுமாக காட்சியளிக்கும் வடுகபட்டி விலக்கு சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்க வராததால் சுமார் 400 மீட்டர் நீளத்திற்கு சாலையில் நாற்றுக்களை நட்டு வைத்துவிட்டு கிராம மக்கள் வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்