எரிசாராயம் கடத்திய 2 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

திட்டக்குடி அருகே எரிசாராயம் கடத்திய 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-06 22:39 GMT
கடலூர்,

எரிசாராயம் கடத்திய 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்த விவரம் வருமாறு:-

விருத்தாசலம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணமல்லி மற்றும் போலீசார் கடந்த மாதம் 25-ந்தேதி திட்டக்குடி தாலுகா நரையூர் ஏரிக்கரை அருகேயுள்ள சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, காரில் 550 லிட்டர் எரிசாராயம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அதனை காரில் கடத்தி வந்த திண்டிவனம் களத்துமேட்டு தெருவைச்சேர்ந்த துரை என்பவர் மகன் முரளி (வயது 27), வேப்பூர் அருகே உள்ள வடபாதி தெற்கு தெருவைச்சேர்ந்த ராயபிள்ளை மகன் சரத்குமார்(28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். முரளி மீது ஏற்கனவே விருத்தாசலம் மது விலக்கு அமல் பிரிவில் 3 வழக்குகளும், திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவில் 2 வழக்குகளும், சரத்குமார் மீது விருத்தாசலம் மதுவிலக்கு அமல்பிரிவில் 5 வழக்குகளும் உள்ளன.

இதனால் இருவரையும் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு கடலூர் மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் முரளியையும், சரத்குமாரையும் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் முரளியும், சரத்குமாரும் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவின் நகல் கடலூர் மத்திய சிறையில் உள்ள முரளியிடமும், சரத்குமாரிடமும் சிறைத்துறை அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்