கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாறு கரையோர கிராமங்களில் வெள்ள அபாயம், தண்டோரா மூலம் எச்சரிக்கை

கனமழை எதிரொலியாக, முல்லைப்பெரியாறு கரையோர கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2018-10-06 23:00 GMT

உப்புக்கோட்டை,

தேனி மாவட்டத்தில் பாய்ந்தோடும் ஆறுகளில் முல்லைப்பெரியாறு முக்கியமானதாகும். தற்போது பெய்து வரும் மழை காரணமாக, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் எதிரொலியாக, முல்லைப்பெரியாற்றின் கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்புக்கோட்டை கிராமம் முல்லைப்பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.

இதைக்கருத்தில் கொண்டு உப்புக்கோட்டை முல்லைப்பெரியாற்றின் கரையோரத்தில் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். உப்புக்கோட்டை சின்னசாமி கோவில், உருட்டுபாறை, கூட்டுக்குடிநீர் திட்ட பகுதி, மாணவிகள் விடுதி, தெற்குத்தெரு ஆகிய இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வைத்தொடர்ந்து போடி வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) பாரதமணி, தொழில்நுட்ப உதவி இயக்குனர் முத்துமாரி, செயற்பொறியாளர் கவிதா மற்றும் வருவாய்த்துறையினர் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.மேலும் தண்ணீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

வீடுகளில் தண்ணீர் புகுந்தால் பொதுமக்களை மீட்டு தங்க வைப்பதற்காக தனியார் மண்டபம், பச்சையப்பா உயர்நிலைப்பள்ளி ஆகியவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உப்புக்கோட்டை மட்டுமின்றி முல்லைப்பெரியாற்றின் கரையில் உள்ள குண்டல்நாயக்கன் பட்டி, பாலார்பட்டி கூழையனூர், கோட்டூர், உப்பார்பட்டி ஆகிய பகுதிகளிலும் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் வீரபாண்டி பகுதியில் முல்லைப்பெரியாற்றில் யாரும் குளிக்காமல் தடுக்கும் வகையில், பேரூராட்சி செயலாளர் செந்தில்குமார் தலைமையிலான ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் கடமலை–மயிலை ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகை ஆறு, மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான ஓடைகளில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு மேலாக வறண்ட நிலையில் காணப்பட்ட கருப்பையாபுரம், நேருஜிநகர் உள்ளிட்ட ஓடைகளிலும் நீர்வரத்து ஏற்பட்டது. இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் கடமலை–மயிலை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார்.

கடமலை–மயிலை ஒன்றியத்தில் உள்ள பாலூத்து கிராமத்தை சுற்றிலும் இரண்டு ஓடைகள் உள்ளன. கடந்த 2004–ம் ஆண்டு பெய்த கனமழையினால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். மேலும் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. கால்நடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

எனவே மீண்டும் அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் ஓடைகளின் இருபுறத்திலும் உள்ள செடி, கொடிகள் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றவும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

இதேபோல் கடமலை–மயிலை ஒன்றியத்தில் வைகை ஆற்றங்கரை மற்றும் ஓடைகளின் அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு செய்தார். கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மீட்பு பணியை மேற்கொள்ள போலீசார் தயார்நிலையில் உள்ளனர். மேலும் கிராமப்புறங்களில் ரோந்து பணியில் ஈடுபடவும் போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்