புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் லட்சார்ச்சனை விழா

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் லட்சார்ச்சனை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-10-06 22:30 GMT
திருச்சி,

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் லட்சார்ச்சனை விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.

தொடர்ந்து காலை 8.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஏக தின லட்சார்ச்சனை விழா நடந்தது. விழாவையொட்டி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பட்டர்கள் வேதமந்திரங்கள் முழங்க லட்சார்ச்சனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத சனிக்கிழமை என்பதால் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வழிபாடு செய்தனர்.

இதேபோல் ஸ்ரீரங்கம் சிங்கபெருமாள் கோவில், கே.கே.நகர் சீனிவாசபெருமாள் கோவில், வரகனேரி வரதராஜ பெருமாள் கோவில், பொன்மலை மலையடிவாரத்தில் உள்ள விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்.

துறையூரை அடுத்த பெருமாள்மலையில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி மாத 3-ம் சனிக்கிழமையையொட்டி மலையில் உள்ள மூலவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, உற்சவமூர்த்தியான சீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கருப்பண்ண சுவாமி சன்னதியில் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. உற்சவத்தை முன்னிட்டு பல மாவட்டங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்