கனமழையை எதிர்கொள்ள அரசு தயார் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி

கனமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-10-06 00:15 GMT
புதுச்சேரி,

புதுவையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் கனமழையை எதிர்கொள்ள அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நடந்தது.

கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினர். கூட்டத்தில் அமைச்சர் கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி மற்றும் அரசு துறை செயலாளர்கள், இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 7-ந் தேதி(நாளை ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுவை இதுவரை ஒரே நாளில் இவ்வளவு மழைப்பொழிவை கண்டதில்லை. எனவே இந்த கனமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது.

மழை பெய்யும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மழைநீரை உடனடியாக வெளியேற்ற வருவாய்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்ற உள்ளனர். கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும் என்று மின்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

சுகாதாரத்துறையிடம் போதிய அளவு மருந்துகள் கையிருப்பு வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மரம் விழுந்தால் அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையில் தாழ்வான பகுதிகள் அடையாளம் கண்டுள்ளோம். வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, மின்துறை என அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்களும் 7-ந் தேதி விடுப்பு எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம்.

பெரும் மழையின் போது தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தால் புதுச்சேரி நகராட்சி பகுதியில் 10 இடங்களிலும், உழவர்கரை நகராட்சி பகுதியில் 16 இடங்களிலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படுகிறது. எனவே மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு தக்க வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு வருவாய் துறை மூலம் உணவு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை.

முகரம் பண்டிகைக்காக விடப்பட்ட விடுமுறையையொட்டி நாளை(இன்று சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கன மழை பெய்து வருவதால் நாளை (இன்று) அரசு பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதி அண்ணாநகர், வேல்முருகன் நகர், டி.ஆர்.நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிவுநீர் வாய்க்கால்களை பார்வையிட்ட அவர் அவற்றில் அடைப்புகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்