ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நர்சு பலி?
ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நர்சு பலியானதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஹரிராமகிருஷ்ணன். அரசு பள்ளி ஆசிரியரான இவருடைய மனைவி சுதா(வயது37) ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தொற்றாநோய் பிரிவு நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த நர்சு சுதா தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு தீவிரமாகியதால் உடனடியாக மதுரையில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று காலை திடீரென்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சிகிச்சை பலனின்றி இறந்துபோனதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ஜவகர்லாலிடம் கேட்டபோது, உடல்நிலை பாதிக்கப்பட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நர்சு சுதா இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
மஞ்சள்காமாலை நோய் முற்றி உடல்உறுப்புகள் அனைத்தும் செயல்இழந்துவிட்ட நிலையில் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பா அல்லது என்ன பாதிப்பு என்பது குறித்து மதுரை தனியார் மருத்துவமனை அறிக்கை கிடைக்க பெற்றதும்தான் கூறமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.