பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று திண்டிவனத்தில் நடந்த பா.ம.க.ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

Update: 2018-10-05 23:15 GMT

திண்டிவனம்,

பெட்ரோல்– டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இந்த விலை உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நேற்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தியார் திடலில் நேற்று காலை பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:–

மக்கள் பிரச்சினைக்கான முக்கிய போராட்டம் இது. இந்த ஆண்டு போராட்ட ஆண்டு. ஊழல் ஒழிப்பு ஆண்டு. இளைஞர்களின் எழுச்சி ஆண்டு. பெட்ரோல், டீசல் விலையை கொஞ்சம், கொஞ்சமாக ஏற்றி, பின்னர் விலையை குறைப்பார்கள். இதுவரை மத்திய பா.ஜ.க.அரசு 118 சதவீதம் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிஉள்ளது. பெட்ரோல், டீசல் ஆடம்பர பொருளா?.

இந்த விலை ஏற்றத்தால் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள் தான். அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். இதை மத்திய, மாநில அரசுகள் உணரவில்லை. பெட்ரோல், டீசல் விலையை கடந்த 51 நாட்களில் ஒரேஒருமுறை மட்டும் குறைத்துள்ளனர். 47 முறை விலையை ஏற்றி உள்ளனர்.

2014–16–ம் ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. அப்போதும் மத்திய, மாநில அரசுகள் விலையை குறைக்க வில்லை. பெட்ரோலியத்துறை மத்திய மந்திரி தர்மேந்திரா பிரதான் பத்திரிகையாளர்களிடம் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று கூறி வருகிறார். ஆனால் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் விற்பனையில் மத்திய அரசுக்கு கடந்த 4 ஆண்டுகளில் கிடைத்த லாபம் 12 லட்சம் கோடிகள். 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது பெட்ரோல், டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தலா 2½ ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதைவிட மாநில அரசு பெட்ரோல், டீசல் விற்பனையில் கொள்ளையடித்து வருகிறது.

இதில் தமிழக அரசுக்கு இந்த ஆண்டு மட்டும் 4 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வரும். தமிழக அரசு பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாயும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாயும் குறைக்கலாம். இந்தியாவை விட பாகிஸ்தான், ஈரான், சூடான் உள்ளிட்ட 145 நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது. ஆகவே பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வரப்பட்டால் 28 சதவீதத்துக்குமேல் வரி விதிக்க முடியாது. பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதோடு, அதன் விலையையும் குறைக்க முன்வரவேண்டும். பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஆகவே ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிம்மதியாக வாழ மத்திய, மாநில அரசுகள் வழி வகை செய்ய வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

மேலும் செய்திகள்