வாடிக்கையாளர்கள் பெயரில் கடன் பெற்று ரூ.3 கோடி மோசடி செய்த வங்கி பெண் மேலாளர் கைது
வாடிக்கையாளர்கள் பெயரில் கடன் பெற்று ரூ.3 கோடி மோசடி செய்த வங்கி பெண் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர், கடந்த 1–ந்தேதி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:–
நான் காரைக்குடியில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறேன். இதற்காக மூலிகை மரங்கள் மற்றும் செடிகளை வளர்த்து வந்தேன். அங்கு, திண்டுக்கல்லில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பெண் மேலாளர் சொர்ணபிரியா என்பவர் சிகிச்சைக்காக வந்தார். அப்போது, மூலிகை தோட்டத்தை விரிவாக்கம் செய்ய கடன் வாங்கி தருவதாக கூறினார்.
இதை நம்பிய நான் வங்கிக்கு சென்று பெண் மேலாளரை சந்தித்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். ரூ.50 லட்சம் கடன் தருவதாக கூறி, முதல்கட்டமாக ரூ.6 லட்சம் மட்டும் தந்தார். இதையடுத்து, பணம் வரவில்லை என்று கூறி காலம் தாழ்த்தி வந்தார்.
ஆனால், எனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது ரூ.50 லட்சம் கடன் பெற்றிருப்பது தெரியவந்தது. ரூ.6 லட்சத்தை மட்டும் தந்துவிட்டு மீதி பணத்தை வங்கி மேலாளர் மோசடி செய்துவிட்டார். இதற்கு அவருடைய நண்பர்கள் ஹரிகரன், ராஜா மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட 4 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல, திண்டுக்கல்லை சேர்ந்த குமரேசன் உள்பட மேலும் 6 பேரின் பெயரிலும் கடன் பெற்று மொத்தம் ரூ.3 கோடி வரை சொர்ணபிரியா உள்ளிட்டோர் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து அவர்களும் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், சொர்ணபிரியா உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர், இன்ஸ்பெக்டர் வினோதா, சப்–இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி, ரெய்கானா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் சொர்ணபிரியாவை போலீசார் கைது செய்தனர். மேலும், அவருடைய நண்பர்கள் ஹரிகரன், ராஜா மற்றும் வங்கி துணை பொது மேலாளர்கள் சங்கரலிங்கம், சுதிந்தர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.