கனமழை காரணமாக நீலகிரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு

கனமழை காரணமாக நீலகிரியில் இன்று (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Update: 2018-10-05 22:30 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்தது. பகலில் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே ஊட்டி நகரில் சாரல் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. சாரல் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ–மாணவிகள், அலுவலக பணிகளுக்கு சென்றவர்கள், வேலைகளுக்கு போனவர்கள் என அனைவரும் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடியும், மழை கோட் அணிந்தபடியும் செல்வதை காண முடிந்தது.

சுற்றுலா நகரமான ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். மேலும் அவர்கள் கொட்டும் மழையிலும் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்ததோடு, செல்போனில் தங்களை செல்பி எடுத்தனர். இதற்கிடையே நேற்று மாலை 6.30 மணியளவில் ஊட்டியில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை விடாமல் ஒரு மணி நேரம் பெய்தது. கன மழையால் ஊட்டி கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, மத்திய பஸ் நிலையம், கூட்ஷெட் சாலை, லோயர் பஜார், சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஊட்டி மெயின் பஜாரில் குழிகளில் தண்ணீர் நிரம்பி இருந்ததால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்துக்குள் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கியது. சுமார் ஒரு அடி உயரம் தண்ணீர் கடைகளை சூழ்ந்து நின்றது. பின்னர் அங்கு கடைகள் வைத்திருப்பவர்கள் அடைப்புகளை அகற்றி, தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தினர். அதன் பின்னர் தண்ணீர் வடிந்தது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று இரவு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, நீலகிரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை விடப்படுகிறது என்று கூறப்பட்டு உள்ளது. ஊட்டியில் தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது.

மேலும் செய்திகள்