பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-04 22:30 GMT
ஈரோடு,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அரசு பணியிடங்களை குறைக்கும் அரசாணை எண் 56-யை ரத்து செய்ய வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்திலும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் விடுப்பு எடுத்து ஈரோடு தாலுகா அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை செயலாளர் சுகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கிடு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மணியன், சுகாதார செவிலியர் சங்க மாநில செயலாளர் உஷாராணி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒன்றிய தலைவர் சுமதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், அரசு ஊழியர்களின் போராட்டம் பற்றி தெரியாத பொதுமக்கள் பலர் அரசு அலுவலகங்களுக்கு வந்திருந்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேபோல் பல்வேறு அரசு பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர்கள் பலர் விடுப்பு எடுத்து சென்றனர். இதனால் குறைவான ஆசிரியர்களே மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்தனர். ஆனால் வழக்கம்போல் அனைத்து பள்ளிக்கூடங்களும் செயல்பட்டன.

இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வருகிற 13-ந் தேதி சேலத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக மாநாடு நடத்தப்பட உள்ளது. அதன்பின்னர் அடுத்த மாதம் (நவம்பர்) 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர், கோபி, அந்தியூர், சத்தியமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்